Photos

Photos
Me and Myself

Saturday, March 31, 2012

விழுவதெல்லாம் அழுவதற்கில்லை

இலையுதிர் காலம் -
மரம் மொட்டையாக நின்றது.
புல் மேய்ந்த மாடுகள்,
மரத்தை இரக்கத்தோடு நோக்கின
உன் இலைகள் விழுந்து கொண்டிருக்கின்றன
உன்னைப் பார்த்தால் அழ வேண்டும் போல் இருக்கிறது
என்ற ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது

மரம் சொன்னது
நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை
புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும்
நிமிர்ந்தே நின்றது மரம்
அது சொன்னது -
விழுவதெல்லாம் அழுவதற்கில்லை
எழுவதற்காக...

Friday, March 16, 2012

அப்பா

அப்பா...

நீங்கள் உயிரும் சதையுமாய்

என் கண் முன்னால் இருந்த பொழுது

நினைவில் வைக்க மறந்த எத்தனையோ நிகழ்வுகள்

இன்று நீங்கள் இல்லாதபோது

என்றும் மறக்க முடியாதவையாக மாறிவிட்டன...

என்னை தோளிலும் மாரிலும் எத்தனை முறை சுமந்திருப்பீர்கள்

நான் காலையில் எழ அடம்பிடிக்கும்போது

என்னை உப்பு மூட்டை சுமந்தீர்கள்

கீழே விட்டால் தேனி கொட்டி விடும் என்று

என்னை தூக்கியே வைத்துக் கொள்வீர்கள்

எனக்கு விளையாட நண்பர்கள் இல்லாதபோது

என் தோழனாக...

அம்மா இல்லாதபோது

என் தாயாக....

பாடம் சொல்லித்தரும்போது

என் ஆசானாக...

கீழே விழுந்து காயம் படும்போது

என் மருத்துவராக...

என்னோடு சேர்ந்து கதை புத்தகம் படிக்கும்போது

என் சகோதரியாக...

நீங்கள் இருந்தவரை உங்கள்

கைபிடித்தே சாலையைக் கடந்திருக்கிறேன்...

இப்பொழுது கூட ஒவ்வொரு முறை சாலையை கடக்கும்போதும்

நீங்கள் என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன்...

இன்று நான் இருக்கும் நிலைக்கு நீங்களும் ஒரு அஸ்திவாரம்....

அப்பா...

இத்தனையும் செய்த உங்களுக்கு நான் என்ன செய்தேன்...

இனிமேலும் என்னால் என்ன செய்ய முடியும்?

என்னை பெற்ற அப்பாவை எனக்கு நினைவில்லை

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நீங்கள் தான் எனக்கு எல்லாமே

உங்கள் திடீர் மரணம் என் வாழ்வில் விழுந்த பெரிய இடி...

அப்பா...

இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

நான் உங்களுக்கே மகளாகும் வரம் வேண்டும்...